திமுக மீது பாய்ச்சல்… பாஜக பற்றி அமைதி! — விஜய் சொல்ல வருவது என்ன?
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டபின் ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக இருந்த தவெக தலைவர் விஜய், தற்போது மீண்டும் அரசியல் மேடையில் களமிறங்கியுள்ளார். மாமல்லபுரத்தில் நடந்த தவெக சிறப்பு பொதுக்குழுவில் அவர் திமுக மீது கடுமையான தாக்குதலை நடத்தியதோடு, பாஜக குறித்து ஒரு வார்த்தையும் கூறாதது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய் ‘சைலண்ட் மோட்’லில் இருந்த நிலையில், கடந்த வாரம் உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழுவில் அவர் தீவிரமாகப் பேசி, திமுக அரசை நேரடியாக குறிவைத்தார்.
அந்த பொதுக்குழுவில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 10 தீர்மானங்கள் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தன. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேச்சுகளும் திமுக எதிர்ப்பில் மையம் கொண்டிருந்தன.
ஆனால், பொதுக்குழுவில் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல், மக்கள் சந்திப்பு போன்ற விஷயங்கள் குறித்து எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. தீர்மானங்களில் “முதல்வர் வேட்பாளர் விஜய்தான்”, “கூட்டணி குறித்து விஜய் முடிவு எடுப்பார்” என்ற வரிகளே முக்கியமாக இடம்பெற்றன.
திமுக குறி – பாஜக குறிப்பு மிதமானது
பொதுக்குழுவின் முழு மனோபாவமும் திமுக எதிர்ப்பாகவே இருந்தது. கரூர் சம்பவத்துக்குப் பொறுப்பாக திமுக அரசையே விஜயும், தவெக தீர்மானங்களும் குற்றம் சாட்டின. ஆனால், பாஜக குறித்து விஜய் வாய் திறக்காதது கவனத்தை ஈர்த்தது.
12 தீர்மானங்களில் ஒன்றில் மட்டும் பாஜக அரசு குறித்து சிறிய கண்டனம் பதிவு செய்யப்பட்டது. அது மீனவர்கள் கைதுக்கு எதிரான தீர்மானம். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த தீர்மானத்தில் தேர்தல் ஆணையத்தையே குறை கூறினர்; மத்திய அரசோ, பாஜகவோ குறிப்பிடப்படவில்லை.
இதன் மூலம், தவெக — குறிப்பாக விஜய் — திமுகவை நேரடி எதிரியாகவும், பாஜகவை ‘மிதமான விமர்சன’ கோணத்திலுமே பார்த்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிமுக கூட்டணி யூகங்களுக்கு இடைநிறுத்தம்
கரூர் சம்பவத்துக்குப் பிறகு, அதிமுக தலைவர் இபிஎஸ் விஜய்க்கு ஆதரவாக பேசியது, அதிமுக கூட்டங்களில் தவெக கொடிகள் பறக்கவிடப்பட்டதும் கூட்டணி யூகங்களை தூண்டியிருந்தது. ஆனால், பொதுக்குழுவில் “விஜய்தான் முதல்வர் வேட்பாளர்” என உறுதியாகச் சொல்லியதன் மூலம், அதிமுக-தவெக கூட்டணி பற்றிய ஊகங்களுக்கு தற்காலிகமாக முடிவுக்குப் புள்ளி வைத்துள்ளனர்.
அரசியல் பின்னணியில் கேள்விகள்
கரூரில் தற்போது சிபிஐ விசாரணை தீவிரமாக நடந்து வரும் சூழலில், விஜய் பாஜக குறித்து மௌனம் காப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அவரது “மிதமான பாஜக விமர்சனம்” எதிர்காலத்தில் அதிமுக–பாஜக–தவெக இடையேயான சாத்தியமான கூட்டணி முயற்சிகளுக்கான வழியைத் திறக்குமோ என்ற சந்தேகத்தையும் சிலர் வெளியிட்டுள்ளனர்.