“தவெக தலைவர் விஜய் பலவீனமானவர்” – பேரவைத் தலைவர் அப்பாவு விமர்சனம்
“தவெக தலைவர் விஜய் பலவீனமானவர். கரூர் சம்பவத்தில் தமிழக முதல்வர் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்,” என மாநில சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் உடையார்பட்டியில், தாமிரபரணி ஆற்றங்கரையில் சமூக நல்லிணக்க பேரவை, தமிழ்நாடு அய்க்கஃப், துறவியர் பேரவை, மற்றும் தோழமை கல்வி நிறுவனங்கள் இணைந்து மாநில அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சைக்கிள் பேரணி மற்றும் மரக்கன்று–பனை விதை நடும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் இணைந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் பனை விதைகள் நட்டு விழிப்புணர்வு நடவடிக்கையை தொடங்கி வைத்தனர்.
பின்னர் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து 500-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்தனர். மேலும் பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பறை அடித்து, பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஊடகவியலாளர்களை சந்தித்த அப்பாவு கூறியதாவது:
“தவெக தலைவர் விஜய் பலவீனமானவர். ஒரு பிரச்சினை ஏற்பட்டவுடன் அவர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தப்பி ஒளிந்துவிட்டார்கள். ஆனால் கரூர் சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் மிகுந்த பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். அவரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் தான் சிறுமை அடைவார்கள்.
முதல்வரிடம் பழிவாங்கும் மனப்பான்மை இல்லை. தண்டனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், விஜய்யை அன்றே கைது செய்திருப்பார். 41 பேர் உயிரிழந்த நிலையில், அந்த நேரத்தில் காணாமல் போனவர்கள் இப்போது நடிகர் வடிவேலுவின் “நானும் ரவுடிதான்” எனும் வசனம் போல பேசுகிறார்கள்.
பலவீனமானவர்கள் தான் தங்களை வீரர்களாக காட்ட முயல்வார்கள். இதற்கு முன் நடிகர்கள் தொடங்கிய கட்சிகள் எவ்வாறு முடிந்தன என்பது வரலாறாக உள்ளது. அதுபோல, இப்போது கட்சி தொடங்கிய நடிகரும் அந்த வரலாற்றில் இடம் பெறுவார்.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் டி.எம்.கே. வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக தொடர்வார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் யாருக்கும் அச்சம் இல்லை,” என அவர் கூறினார்.