ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி விற்பனைக்கு – டியாகியோவின் அதிரடி முடிவு!
சமீபத்திய ஐபிஎல் சீசனில் சாம்பியனாக வெற்றி பெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை விற்க, அதன் உரிமையாளர் நிறுவனம் டியாஜியோ (Diageo) முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (SEBI) டியாகியோ நிறுவனம் அளித்த அறிக்கையில், ஆர்சிபி அணியின் மீது மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை மதிப்பாய்வு (Strategic Review) செய்யத் தொடங்கியுள்ளதாகவும், அந்த ஆய்வு 2026 மார்ச் 31க்குள் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது ஆர்சிபி ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளின் உரிமையையும் கொண்டுள்ள ராயல் சாலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (RCSPL) நிறுவனம், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) எனும் டியாகியோவின் துணை நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.
நான்கு மாதங்களுக்குள் அணியை விற்பனை செய்யும் பணிகளை முடிக்க நிறுவனம் தீவிரமாக திட்டமிட்டுள்ளது என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
டியாஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஆர்சிபி அணி எங்களுக்குப் பெருமை அளிக்கும் மூலதனச் சொத்தாக இருந்தாலும், எங்கள் முக்கிய வணிகம் மதுபானத் துறையில் இருப்பதால், கிரிக்கெட் வணிகம் அதனுடன் நேரடியாக தொடர்புடையது அல்ல. எனவே, இந்த முதலீட்டை மீளாய்வு செய்து வருகின்றோம்,”
என்று தெரிவித்துள்ளது.
வட்டார தகவல்களின்படி, ஆர்சிபி அணியின் மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (₹16,000 கோடி) என கணிக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் டியாகியோவின் உலகளாவிய வணிகம் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த விற்பனை முடிவு வெளிவந்துள்ளது.
கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதத்தில் இதே நிறுவனமே “ஆர்சிபி விற்பனை செய்திகள் கற்பனையானவை” என்று மறுத்திருந்தாலும், தற்போது உலக சந்தை அழுத்தங்கள் காரணமாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும், ஐபிஎல் கோப்பையை வென்ற பின்னர் பெங்களூரு சின்னசாமி மைதானம் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்துக்கு பின், அணி விற்பனை குறித்த ஊகங்கள் அதிகரித்தன.
ஐபிஎல் தொடங்கிய 2008ஆம் ஆண்டில், ஆர்சிபி அணியை விஜய் மல்லையா 111.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியிருந்தார். பின்னர், அவர் பதவி விலகியதும், டியாஜியோ நிறுவனம் முழுமையான உரிமையாளராக ஆனது.