மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனியில் கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நாளை (நவம்பர் 7) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தமிழகத்தின் மீது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும், நவம்பர் 9 முதல் 11 வரை தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
நாளை (வெள்ளிக்கிழமை) மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை பதிவின்படி, அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. அதன்பின் தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருவாரூர் மாவட்டம் கொடவாசல், பெரம்பலூர் மாட்டம் வேப்பந்தட்டை, விழுப்புரம் மாவட்டம் வல்லம், மரக்காணம், வானூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.