அபுதாபியில் யோகா மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இந்திய கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கும் “இந்திய இல்லம்” அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சுமார் 20 மாதங்களுக்கு முன்பு அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட இந்துக் கோவில் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய இந்திய இல்லம் (India House) கலை, கலாச்சாரம், கல்வி மற்றும் மக்கள் பரிமாற்ற உறவுகளை வலுப்படுத்தும் மையமாக செயல்பட உள்ளது.
மேலும், அந்த மையம் யோகா பயிற்சி மையமாகவும் வடிவமைக்கப்படவுள்ளது. உலகளவில் பிரபலமடைந்த யோகாவை, வளைகுடா நாடுகள் ஒரு போட்டி விளையாட்டாக அங்கீகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக, பல அமைச்சகங்களின் பிரதிநிதிகள் அடங்கிய இந்தியக் குழுவும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளும் சமீபத்தில் அபுதாபியில் கூட்டம் நடத்தி விவாதித்து ஒப்புதல் பெற்றுள்ளனர்.