தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாற்றம் — பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை
தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் முக்கியமான அரசியல் மாற்றங்கள் நிகழப்போகின்றன என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி பகுதியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஈச்சம்பாடி அணையிலிருந்து உபரி நீரை ஏற்றும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, அன்புமணி தலைமையில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அந்த நிகழ்வில் பேசிய அன்புமணி,
“விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் எந்தத் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் உட்பட பல பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. மக்களின் வாழ்வாதாரமான நீர்ப்பாசன திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் தரவில்லை,” எனக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“இன்றுடன் பாமக உரிமை மீட்பு பயணம் 100-வது நாளை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு, ஈச்சம்பாடி அணை உபரி நீரை பயன்படுத்தி 60 ஏரிகளை நிரப்பும் திட்டம் கோரி விவசாயிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்தத் திட்டம் நடைமுற்றால், கூடுதலாக 8,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்,” என்றார்.
அதோடு அவர் மேலும் கூறியதாவது:
“தமிழகத்துக்கு ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக முதல்வர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. உண்மையில் மாநிலத்தில் ரூ.1 லட்சம் கோடிய்க்கும் குறைவாகவே முதலீடுகள் வந்துள்ளன. இதை விளக்கும் வகையில் பாமக சார்பில் விரைவில் ஒரு புத்தகம் வெளியிடப்படுகிறது.
சமீபத்தில் கோவையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு குடிபோதை மற்றும் போதைப் பொருள் பயன்பாடே முக்கிய காரணம். தற்போது தமிழகமே நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கிடைக்கும் போதைப் பொருட்கள் அனைத்தும் இங்கு எளிதில் கிடைக்கின்றன,” என்றார்.
அதனைத் தொடர்ந்து அவர்,
“தேர்தல்களில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி வெற்றி பெறலாம் என எண்ணும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அடுத்த சில வாரங்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் நிகழும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி தோற்கடிக்கப்படும்,” என வலியுறுத்தினார்.