அமெரிக்க நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி
அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் நகரின் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.
மம்தானியின் தாய் மீரா நாயர் இந்தியாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர்; தந்தை மகமூத் மம்தானி உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஏழு வயதில் குடும்பத்துடன் நியூயார்க் நகருக்கு குடியேறினார். கல்வி முடித்ததும் அரசியலுக்கு வந்த அவர், 2020 ஆம் ஆண்டு நியூயார்க் சட்டப்பேரவைக்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போதைய மேயர் தேர்தலில், மம்தானி ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கர்டிஸ் ஸ்லிவா மற்றும் சுயேட்சை வேட்பாளராக முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ போட்டியிட்டனர்.
தனது தேர்தல் பிரச்சாரத்தில், மம்தானி இலவச பேருந்து சேவை, குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், நகராட்சியின் சொந்த பலசரக்கு கடைகள், குறைந்த விலையில் வீடுகள் மற்றும் வாடகை சலுகைகள் உள்ளிட்ட பல பொதுநல வாக்குறுதிகளை அளித்தார்.
இறுதியில், 50.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற மம்தானி, நியூயார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளி முஸ்லிம் மேயராக வரலாறு படைத்துள்ளார். அவரது வெற்றியை உலகம் முழுவதும் உள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.
“ஊழல் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுவேன்” — மம்தானி
வெற்றிக்குப் பிறகு உரையாற்றிய ஜோரான் மம்தானி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய ‘விதியுடன் ஒரு சந்திப்பு’ உரையை நினைவுகூர்ந்தார்.
அவர் கூறியதாவது:
“நியூயார்க்கின் புதிய தலைமுறைக்கு நன்றி. நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம்; உங்களுக்காக போராடுவோம். எதிர்காலம் நம் கையில் உள்ளது.
ஒரு அரசியல் சாம்ராஜ்யத்தை நாம் தோற்கடித்துள்ளோம். டொனால்டு ட்ரம்ப் அவர்களே — உங்களை உருவாக்கிய நகரமே இப்போது உங்களை தோற்கடித்துள்ளது.
ஊழல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன். இது தான் கோடீஸ்வரர்களுக்கு வரிவிலக்கு வழங்க அனுமதித்தது.
மலிவான வாழ்க்கை, புதிய அரசியல், மாற்றம் ஆகியவற்றுக்காக வாக்களித்த நியூயார்க் மக்களுக்கு நன்றி.”