பொதுத் துறை அறிவிப்புகளை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
பொது, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகளின் அறிவிப்புகளை துரிதமாக நிறைவேற்றி, மக்களுக்கு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார்.
2021–22 முதல் 2025–26 வரை பொதுத்துறையால் வெளியிடப்பட்ட 90 அறிவிப்புகளில் 68 நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவை விரைவில் முடிக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.
மேலும், பசுமை புத்தாய்வு திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம், வனவிலங்குகளுக்கான சிகிச்சை மையங்கள், சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா அமைத்தல், மரக்காண பன்னாட்டு பறவைகள் மையம் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் முதல்வர் கேட்டறிந்தார்.
இந்த இரண்டு துறைகளில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர். எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.