ரஜினி, அமிதாப், மம்மூட்டி படங்கள் உள்பட ஆயிரம் திரைப்படங்களுக்கு டப்பிங் – சாய்குமார் பெருமிதம்
நடிகர் சாய்குமார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், டப்பிங் கலைஞராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
சாய்குமார் கூறியதாவது:
“14 வயதில் தெலுங்கு படம் தேவுடு சேசினா பெல்லி மூலம் எனது கதாபாத்திரப் பயணம் தொடங்கியது. பார்வையற்ற சிறுவனாக நடித்து, மூத்த நடிகர்களுடன் ஒத்துழைக்க வேண்டியது எளிதல்ல. அப்போது என் பெற்றோர் கூறியது, ‘இயக்குநரின் நடிகனாக இரு’. அதனை இப்போதும் பின்பற்றி வருகிறேன்.
என் பெற்றோர் புகழ்பெற்ற டப்பிங் கலைஞர்களாக இருந்ததால் 1973-ஆம் ஆண்டு டப்பிங் பணியை தொடங்கினேன். தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி. ராமారாவுக்கு டப்பிங் செய்ததையும் நினைவில் வைத்திருக்கிறேன். விஷ்ணுவர்தன், ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால், அமிதாப் பச்சன், சில்வெஸ்டர் ஸ்டாலோன் போன்ற நடிகர்களின் படங்களுக்கும் டப்பிங் செய்துள்ளேன்.
சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற தெலுங்கு நட்சத்திரங்களின் தமிழ்ப் பதிப்புகளுக்கும் நான் டப்பிங் செய்துள்ளேன். 50 ஆண்டுகளுக்குப் பிறகும், எனக்கு இன்னும் அதிக ஏக்கம் உள்ளது. தேசிய விருது, ஆஸ்கர் விருதை வெல்ல விரும்புகிறேன். பாகுபலி, கே.ஜி.எஃப், காந்தாரா போன்ற பெரிய படங்களின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இன்னும் நிறைவேறவில்லை.