மினி பேருந்து திட்டத்திற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு
தமிழக அரசு கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதியை விரிவுபடுத்தும் நோக்கில் விரிவான மினி பேருந்து திட்டம் கடந்த ஆண்டு அறிவித்தது. புதிய திட்டத்தின் மூலம் தனியார் மினி பேருந்துகள் 25 கிமீ தூரம் செல்ல அனுமதி பெற்றுள்ளன. இதற்காக 3,103 புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு, சுமார் 90,000 கிராமங்களில் வாழும் 1 கோடி மக்களுக்கு பயன் கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சில தனிநபர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். முன்பு விசாரித்த தனி நீதிபதி, கிராமங்களில் எளிய போக்குவரத்து வசதி வழங்க அரசு திட்டம் அறிவித்துள்ளதாக கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தார்.
மேலும், மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன் கவுடர் அமர்வில் விசாரித்தனர். அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளதாகவும், 1,350 தனியார் மினி பேருந்துகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீதிபதிகள், இந்த திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டு, உரிமம் வழங்குதல் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாக கூறி விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.