வேலூரில் ரூ.32 கோடியில் ‘மினி டைடல்’ பூங்கா திறப்பு
வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் 4.98 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 கோடி செலவில் கட்டப்பட்ட ‘மினி டைடல்’ பூங்காவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இந்த மினி டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேர் நேரடி மற்றும் 50 பேர் மறைமுக வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். திறப்பு விழாவின் போது, வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர். சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றினார்.
அவரின் பேச்சில், இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா வேலூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தி, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற இடையிலான பொருளாதார வாய்ப்புகளை இணைக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், ப. கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக கண்காணிப்பு பொறியாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.