சாலையில் கிடைத்த ரூ.2.38 லட்சத்தை நேர்மையாக போலீஸாரிடம் ஒப்படைத்த பரோட்டா கலைஞருக்கு பாராட்டு!
புதுவை தவளக்குப்பம் அருகே தானம்பாளையம்–நல்லவாடு சாலையைச் சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. அதில் கிடைத்த மொய் தொகையான ரூ.2,38,000 மூலம் அரியாங்குப்பத்தில் அடகு வைத்திருந்த நகையை மீட்க அவர் முடிவு செய்தார்.
இந்தப் பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு இன்று காலை மோட்டார் சைக்கிளில் அரியாங்குப்பம் நோக்கி புறப்பட்டார். வழியில் தவளக்குப்பம் பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும்போது, பணம் இருந்த பை காணாமல் போனதை உணர்ந்தார். உடனடியாக தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதே சமயம், தவளக்குப்பத்தைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் சண்முகம், சாலையில் கிடந்த பணப்பையை கண்டெடுத்து, நேர்மையாக போலீஸில் ஒப்படைத்தார். பின்னர், போலீஸார் அந்தப் பணத்தை உறுதிப்படுத்தி விஜயகுமாரிடம் திருப்பிக் கொடுத்தனர்.
சாலையில் கிடைத்த பெரும் தொகையை ஒப்படைத்த சண்முகத்தின் நேர்மையை போலீஸார் பாராட்டி சிறப்பாக கவுரவித்தனர்.