ஆலங்குளமா? அம்பாசமுத்திரமா? – மனோஜ் பாண்டியன் சேர்க்கையால் திமுகவில் பரபரப்பு
ஓபிஎஸ் மீது நம்பிக்கை வைத்து இபிஎஸ்ஸுடன் மோதிக் கொண்டிருந்த மனோஜ் பாண்டியன், தற்போது ஓபிஎஸ்ஸின் அரசியல் நிலை உறுதியில்லாததால் தனக்கென புதிய பாதையைத் தேர்ந்து திமுகவில் இணைந்துள்ளார்.
தேர்தலில் மனோஜ் பாண்டியனுக்கு உறுதியான இடம் வழங்கப்படும் என்று கூறியே அமைச்சர் சேகர் பாபு அவரை திமுகவுக்கு அழைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், கடந்த முறை ஆலங்குளத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், இச்சுற்றில் அந்தத் தொகுதியை விட அம்பாசமுத்திரம் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு தோல்வியடைந்து இன்னும் வாய்ப்புக்காக காத்திருக்கும் முன்னாள் சபாநாயகர் இரா. ஆவுடையப்பன் குழப்பத்தில் உள்ளார்.
இதுகுறித்து நெல்லை மேற்கு மாவட்ட திமுகவினர் தெரிவித்ததாவது:
“அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன் மூன்று முறை போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், அவர் மீண்டும் வெல்ல முடியாது எனக் கருதி தலைமை மனோஜ் பாண்டியனைப் பற்றி யோசித்து இருக்கலாம். அம்பாசமுத்திரத்தில் நாடார் மற்றும் முக்குலத்தோர் வாக்காளர்கள் அதிகம். மனோஜ் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவராகவும், எல்லோருடன் நட்புறவில் இருப்பவராகவும் இருக்கிறார். மேலும் அவரது தந்தை பி.ஹெச். பாண்டியனுக்கு இந்தப் பகுதியில் தனிப்பட்ட செல்வாக்கும் உள்ளது. எனவே ஆலங்குளமோ அம்பாசமுத்திரமோ எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு வெற்றி சாத்தியமே.
அதே நேரில், அண்மையில் ஆலங்குளம் தொகுதி தென்காசியில் இருந்து நெல்லை மேற்கு திமுகவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அந்த மாவட்ட செயலாளராக ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டார். ஆலங்குளத்தில் நாடார் வாக்குகள் அதிகம்; அடுத்தப்படியாக முக்குலத்தோர் உள்ளனர். 2021-இல் பனங்காட்டு படை தலைவர் ஹரி நாடார் தனியாக போட்டியிட்டு 37,000 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தார். இம்முறை ஹரி நாடார், ராக்கெட் ராஜா போன்ற நாடார் பிரபலங்களும் போட்டியிடலாம் என பேச்சு. அப்படி நடந்தால் நாடார் வாக்குகள் பிளவுபடும். அதனால் ஆவுடையப்பனை ஆலங்குளத்தில் நிறுத்தி முக்குலத்தோர் வாக்குகளை ஒருங்கிணைக்க தலைமை நினைக்கலாம்” என அவர்கள் தெரிவித்தனர்.