நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள், 2 குழந்தைகள் – குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் கடல் மற்றும் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிவாரணத் தொகையை மாநில அமைச்சர் சா. மு. நாசர் நேற்று நேரடியாக வழங்கினார்.
அக்டோபர் 31ஆம் தேதி, கும்மிடிப்பூண்டி-பெத்திக்குப்பம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த தேவகி (30), தேர்வழி பகுதியைச் சேர்ந்த காயத்ரி (18), பெரியஓபுளாபுரத்தைச் சேர்ந்த ஷாலினி (18), பொன்னேரி அருகே கோளூரைச் சேர்ந்த பவானி (19) ஆகிய நால்வர் எண்ணூர்-பெரியகுப்பம் கடலில் குளிக்கும் போது அலைகளில் சிக்கி உயிரிழந்தனர்.
மேலும், திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம், மகாத்மா காந்தி நகர் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தமீம் அன்சாரி (தமிழரசு) – வசந்தி தம்பதியின் பிள்ளைகள் ரியாஸ் (5), ரிஸ்வான் (3) ஆகியோர் நவம்பர் 1ஆம் தேதி வீட்டுக்கு அருகிலுள்ள கோயில் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
இந்த ஆறுபேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நான்கு பெண்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. ரியாஸ் மற்றும் ரிஸ்வானின் பெற்றோருக்கு திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், வட்டாட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில், கும்மிடிப்பூண்டி–பெத்திக்குப்பம் இலங்கைத் தமிழர் முகாமில் கட்டப்படும் 198 புதிய வீடுகள், சாலை, வடிகால்வாய் பணிகள் ஆகியவற்றையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.