“சார் என்றாலே திமுக பயப்படுகிறது!” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
அண்ணா பல்கலைக்கழகம் விவகார சார் முதல், தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் வரை – எந்த ‘சார்’ என்றாலும் திமுக அஞ்சுகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:
“தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய பாஜக அரசு வழங்கியது. இதனை பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் நாமக்கலில் எம்பி பேசினால் அமைச்சர் கேட்பதில்லை, அமைச்சர் சொன்னால் எம்பி கேட்பதில்லை. இப்படி இருந்தால் மாவட்டம் எப்படி வளர்ச்சி பெறும்?
தேர்தல் அறிக்கையில் நாமக்கலுக்காக கூறிய வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை. கொல்லிமலை சுற்றியுள்ள கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. கனிம வளங்கள் மட்டுமல்ல, கிட்னியையும் திருடுகிறார்கள். திமுக நடத்தும் மருத்துவமனைக்கு சென்றால் கிட்னி போய்விடும் நிலை. நாமே நம்மைப் பாதுகாக்க வேண்டிய சூழல்.
இப்போது சட்ட ஆட்சி இல்லை, குடும்ப ஆட்சி நடக்கிறது. வரும் தேர்தலில் உதயநிதியை முதல்வராக்கும் இலக்குடன் ஸ்டாலின் செயல்படுகிறார்.
அண்ணா பல்கலை சார், தேர்தல் ஆணைய எஸ்ஐஆர் – எந்த சார் என்றாலும் திமுகவுக்கு பயம். ஏன் இவ்வளவு பயம்? தமிழகத்தின் அனைத்து தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் சூழல் உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். கரூரில் தவெக கூட்டத்தில் விஜய் பாடிய பாடலுக்குப் பிறகு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கொடூரமான சம்பவம் நடந்தது. இப்படி பல சம்பவங்கள் திமுக ஆட்சியில் நடைபெறுகின்றன.
கோயம்புத்தூர் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம். ஆனால் இரவு 11 மணிக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளார். இதைத் தடுப்பது சட்டம் கையில் உள்ள முதல்வரின் பொறுப்பு” என்றார்.