“பாஜக வெளிப்படையான எதிரி… காங்கிரஸ் துரோகி” – திருச்சியில் சீமான் உரை
“பாஜக நமக்கு வெளிப்படையான எதிரி; ஆனால் காங்கிரஸ் நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய துரோகி” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உலகத் தமிழ்க் கிறிஸ்தவர் இயக்கம் ஏற்பாடு செய்த ‘உரையாடுவோம் வாருங்கள்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“சிறுபான்மையினருக்கு உரிமை வேண்டும்; சலுகை வேண்டாம். 60 ஆண்டுகளாக நீங்கள் போட்ட வாக்கால் அவர்கள் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். நீங்கள் எனக்கு வாக்களித்திருந்தால் நாடே மாற்றியிருப்பேன். உங்களுக்கு இப்படி நிலை ஏற்பட்டிருக்காது. ‘சிறுபான்மை’ என்று யாரேனும் சொன்னால் எதிர்த்து நிற்குங்கள். நாம்தான் பெரிய தேசிய இனமான தமிழர்கள்.
சாதி-மத அடையாளத்தை வைத்து மக்களைப் பிரிக்கிறார்கள். சாதியும் மதமும் சொல்லினாலே சிலர் தூண்டப்படுகிறார்கள். இதில்தான் திராவிடக் கட்சிகள் பலம் பார்க்கின்றன. ஒன்றிணைந்தால் வலிமை; பிரிந்தால் பலவீனம்.
பொது தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி நிறுத்திய பட்டியல் வேட்பாளர்கள், மற்ற தொகுதிகளில் போட்டியிட்டவர்களை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். இது நல்ல மாற்றம். நாம் அனைவரையும் வாழ வைப்போம்; ஆனால் நமது மக்களை முன்னிலைப்படுத்துவோம்.
காங்கிரஸ்-பாஜக இரண்டும் கொள்கையில் ஒன்றுதான். கொடியின் நிறம் மட்டும் மாறுகிறது. இன்று பாஜக அமல்படுத்தும் பல சட்டங்களையும் ஆரம்பித்தது காங்கிரஸ்தான். பாஜக எதிரி; காங்கிரஸ் நமக்கு துரோகி.”
நிகழ்வில் ஒரு குழந்தைக்கு ‘அரசேந்திர சோழன்’ என சீமான் பெயர் சூட்டினார். பின்னர் ‘தமிழர் நாள்’ குறியீட்டை வெளியிட்டார்.