நள்ளிரவில் பிரச்சாரம் — விருதுநகரில் கிருஷ்ணசாமி மீது வழக்கு
விருதுநகர் மாவட்டத்தில் நள்ளிரவுக்குப் பிறகும் பிரச்சாரம் நடத்தியதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி மற்றும் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு வரும் ஜனவரி 7-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார வேளையில் பல மாவட்டங்களில் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி மக்களை சந்தித்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்திலும் கிருஷ்ணசாமி பொதுமக்களை சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை ஆமத்தூர் அருகே வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆனால், போலீசார் அனுமதி வழங்கிய நேரத்தை மீறி நள்ளிரவில் பிரச்சாரம் செய்ததாக கூறி, கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் குணம், வெள்ளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் மூர்த்தி ஆகியோருக்கு எதிராக ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.