கோவை பாலியல் வன்கொடுமை | ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை, அதிகபட்ச தண்டனை – முதல்வர் ஸ்டாலின் உறுதி
கோவையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. கோவை விமான நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் 3 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியதை அடுத்து, விசாரணைக்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, குற்றவாளிகளை கண்டுபிடித்து துப்பாக்கியால் காலில் சுட்டு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்து,
“கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, அதிகபட்ச தண்டனை விரைந்து வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என பதிவிட்டார்.
மேலும் அவர்,
“பெண்கள் அடையும் முன்னேற்றமே இத்தகைய வக்கிரமான ஆணாதிக்க மனநிலைக்கு முடிவுத் தரும். முற்போக்கான சமூகமாக நாம் உருவாக வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.