கொடி கம்பங்களை அகற்ற தடை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
பொது இடங்களில் அரசியல் கட்சிகள் கொடி கம்பங்களை அமைக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI-M) முன்பே மேல்முறையீடு செய்திருந்தது.
தொடர்ந்து, CPI தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா சார்பில், வழக்கறிஞர் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதில், கொடி கம்பங்களை அகற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே. கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதே விவகாரத்தில் ஏற்கெனவே இந்த அமர்வு ஒரு மனுவை தள்ளுபடி செய்திருந்தது என்றாலும், வேறு அமர்வு CPI-M தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும், அப்போது கொடி கம்பங்களை அகற்றாமல் தற்போது நிலவும் சூழல் தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவும் வழங்கப்பட்டது.
புதிய மனுவை உரிய அமர்வில் பட்டியலிட மாநில பதிவாளர் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.