தேர்தல் முடிந்த பின் வாக்காளர் திருத்தம் நடத்தியால் பயன் இல்லை: மத்திய அமைச்சர் எல். முருகன்
தேர்தல் நடைபெற்ற பிறகு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டால் அதற்கு எந்த பயனும் இல்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“திமுக அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம், அவற்றிலிருந்து கவனத்தை மாற்றுவதற்காக வேறு விவகாரங்களை முன்வைப்பது வழக்கமாகி விட்டது. அதேபோல், இப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை திடீரென எடுத்துக் கொண்டுள்ளனர்,” என்றார்.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூட, 75 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக குற்றம் சாட்டியதை அவர் நினைவூட்டினார்.
“வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் நோக்கம், இரட்டை வாக்காளர்கள், இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் போலி வாக்காளர்களை நீக்குவது தான். இதற்கான தேவையை திமுகவினரே பலமுறை கூறியுள்ளனர். ஆனால் தேர்தல் முடிந்து திருத்தம் செய்தால் அது பயனற்றதாகிவிடும்,” என்று கூறினார்.
தேர்தல் துல்லியமாக நடக்க வேண்டுமெனில் வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் எல். முருகன் கூறினார்.