Women’s WC | ரன்னர்அப் ஆன தென் ஆப்பிரிக்காவுக்கு ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை!
நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை தொடரில் இரண்டாம் இடத்தை பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்து வாழ்த்தியுள்ளார்.
நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்றது. இந்த தொடரில் இரண்டு முறை நூறு ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனாலும், மீண்டும் முன்னேறி இறுதி சுற்றை எட்டியது அந்த அணி.
“சில நேரங்களில் விளையாட்டின் முடிவு மிகவும் கொடூரமாக இருக்கும். காரணம், வெற்றியாளர் ஒருவரே. இப்படிப்பட்ட உயர்நிலைப் போட்டிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது மிகச் சிறிய தருணங்கள்தான் — தவறிய வாய்ப்பாக இருக்கலாம், டாஸ் முடிவாக இருக்கலாம், பல காரணங்கள் இருக்கலாம்.
தொடர்ந்து இரண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளை விளையாடியது, இந்த உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தும் மீண்டு வந்து இறுதிக்கு சென்றது, அரையிறுதியில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது — இவை எல்லாம் உண்மையான சாம்பியன்களால் மட்டுமே செய்யக்கூடியவை.
இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் எடுத்த ரன்கள் சாதனையாக அமைந்துள்ளன. அரையிறுதி மற்றும் இறுதியில் தொடர்ந்து சதம் அடித்து பாராட்டப் பெற்றார்,” என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.