ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு வேலை – பீஹார் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி வாக்குறுதி
பீஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உறுதி அளித்துள்ளார்.
பீஹாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. 121 தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நாளுடன் நிறைவு பெறுகிறது. இந்த சூழலில் சோன்பர்சா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது:
நாட்டின் முன்னேற்றத்தில் பீஹார் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதை பறிக்கும் முயற்சியில் உள்ளது. பீஹாரில் 65 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாக்குரிமை நீக்கப்பட்டிருக்கிறது. வாக்குரிமை இழந்தால் மக்கள் உரிமைகள் அனைத்தும் இழந்ததற்குச் சமம். வாக்கு திருட்டு என்பது மக்களுக்கு எதிரான மிகப்பெரிய குற்றம்.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் பெண்களுக்கு ரூ.10,000 வழங்குவதாக அறிவிக்கிறார்கள். 20 ஆண்டுகளாக இதை ஏன் செய்யவில்லை? பணத்தை வாங்குங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.
வேலைவாய்ப்பின்மை காரணமாக பீஹாரின் இளைஞர்கள் ஏராளம் மாநிலங்களை நோக்கி வேலைக்காக செல்கின்றனர். தங்கள் குடும்பத்திலிருந்து தூரமாகப் பணி செய்து நாட்டை கட்டியெழுப்பியவர்களே தற்போது வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.
விவசாயமும் லாபமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். விவசாயிகள் உழைப்புக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி தனது நண்பர்களுக்கே பெரிய தொழில்களை வழங்கி வருகிறார். அதானிக்கு பீஹாரில் மிகக் குறைந்த விலையில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்—
- ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை
- அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலாக்கம்
- தேர்வுக் கட்டணம் முழுமையாக ரத்து
- வினாத்தாள் கசிவு தடுக்க கடுமையான நடவடிக்கை
- ஏழை குடும்பங்களுக்கு தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதியுதவி
- ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை
- ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரம்
- விவசாயிகளின் பயிர்களுக்கு உறுதியான குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என அவர் உறுதி தெரிவித்தார்.
இதற்கு பிறகு ரோசேரா நகரில் அவர் பிரச்சாரம் செய்து, பேரணியாக மக்களைச் சந்தித்தார். பெருமளவில் காங்கிரஸ் தொண்டர்கள் அவருடன் சென்றனர்.