“பெண்கள் பாதுகாப்பை அழித்து விட்டது திமுக அரசு” — கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இபிஎஸ் கண்டனம்
பெண்களை பாதுகாக்க தவறியுள்ளதோடு, பெண்கள் பாதுகாப்பை முழுமையாக புறக்கணித்துவிட்டதாக திமுக அரசை விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து X தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“2.11.2025 இரவு, கோவை விமான நிலையம் பின்புறம் நண்பர்களுடன் இருந்த கல்லூரி மாணவியை மூன்று பேர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவரை காயங்களுடன் தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்து விட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.”
“பாதிக்கப்பட்ட மாணவி 3.11.2025 அதிகாலை காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி, ‘தமிழகத்தில் காவல்துறை என்பதைச் சொல்லக்கூடிய அமைப்பு இருக்கிறதா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.”
அவர் மேலும் கூறியதாவது:
“பெண்கள் பாதுகாப்பை முற்றிலும் நிலை குலையச் செய்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்கள் குடியிருக்கும் மிகச் பாதுகாப்பான மாநிலமாக இருந்தது. என் ஆட்சியில் இந்திய மாநிலங்களில் முதலிடத்திலும், நகரங்களிலான தரவரிசையில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் தொடர்ந்து முதன்மைப் பட்டியலில் இருந்தன.”
“ஒரு சில மாதங்களுக்கு முன் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாப்பது அவசியம் என்பதால், அஇஅதிமுக சார்பில் பாதுகாப்பு கருவிகள் தொகுப்பு (பெப்பர் ஸ்பிரே, டார்ச் உள்ளிட்டவை) வழங்கும் திட்டத்தை துவக்கினோம்.”
“திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புக்காக அரசை நம்ப முடியாது. கோவை மாணவி மீது நடந்த இந்த வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக பிடித்து சட்டப்படி கடும் தண்டனை அளிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”