மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண பிரதமரைச் சந்திக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதில் கடும் கவலை தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முதல்வர் ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:
நாகை மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த 35 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீபத்திலேயே ராமேஸ்வரம் மீனவர்களும் கடலில் தாக்கப்பட்டு விரட்டப்பட்டுள்ளனர். அதன் பின்னர் மீண்டும் இக்கைது சம்பவம் நடைபெறுதல், மீனவர் சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 74 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். மேலும், பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 242 படகுகள் இன்னும் மீட்கப்படவில்லை. கடந்த காலத்தை விட இப்போது மீனவர்களுக்கு ஆண்டுகளாக சிறைத் தண்டனையும், மிகப்பெரிய அபராதமும் விதிக்கப்பட்டு வருவது மிகவும் கவலைக்குரியது. இது தமிழக மீனவர்களின் வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கத் திட்டமிட்ட நடவடிக்கை என அவர் குற்றம் சாட்டினார்.
மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதே ஒரே நடவடிக்கையாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார். இது போதுமானதல்ல, எனவே முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மீனவர் பிரதிநிதிகள் உடன் பிரதமரை சந்தித்து, இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு பெற வலியுறுத்த வேண்டும் என்றார்.