தமிழகம்: 59 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
தமிழக காவல் துறையில் நிர்வாகத் தேவைகள், அதிகாரிகளின் விருப்பம் போன்ற காரணங்களின் அடிப்படையில் இடமாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாநிலம் முழுவதும் பணிபுரியும் 59 டிஎஸ்பி (காவல் துணைக் கண்காணிப்பாளர்) பதவியிலிருக்கும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் வெளியிட்டுள்ளார்.
இந்த மாற்றுப் பட்டியலில், காத்திருப்பில் இருந்த டிஎஸ்பி கீதா சென்னையில் உள்ள சிபிசிஐடி ‘சைபர் கிரைம்’ பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய செந்தில்குமார், சென்னையின் அதே பிரிவு தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு தலைமையகத்தில் இருந்த டிஎஸ்பி பூசை துரை, டிஜிபி அலுவலக சமூக ஊடக கண்காணிப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். மாநில சைபர் கிரைம் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிய இலக்கியா, வேலூர் போதைப்பொருள் புலனாய்வு பிரிவில் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
மேலும், புதுக்கோட்டை குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி குமார், சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மொத்தமாக தமிழகத்தில் 59 டிஎஸ்பிக்கள் புதிய பொறுப்பு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.