சுற்றுச்சூழல் நேச சிறார்கள்: காகித பை ஸ்டார்ட்-அப் தொடங்கி அசத்தும் பள்ளி மாணவர்கள்
பெங்களூரு பசவேஸ்வர நகரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சாரதா, சம்யுக்தா, நசிகேதன் ஆகிய மூன்று சிறார்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முனைந்து காகிதப் பைகள் தயாரித்து விற்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கி உள்ளனர்.
பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது இவர்களுக்கு காகிதப் பைகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பிளாஸ்டிக் மாற்று வழிக்கான விழிப்புணர்வை பரப்ப வேண்டும் என்ற நோக்கில், “எகோ வாலா” எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை சிறுமி சாரதா தொடங்கினார். இதில் நசிகேதன் மேலாளராகவும், சம்யுக்தா துணை மேலாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
பள்ளி விடுமுறையுக்குப் பிறகு, தினமும் மாலை நேரத்தில் நகரின் பல பகுதிகளில் தாங்களே தயாரிக்கும் காகிதப் பைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஸ்டார்ட்-அப்பில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள் ரூ.10 கொடுத்து சந்தா செலுத்தலாம். வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஒவ்வொருவரது வீட்டிற்கும் நேரடியாக 2 காகிதப் பைகள் விநியோகம் செய்யப்படுகிறது. கூடுதலாக தேவைப்பட்டால் அதற்கும் தயாராக உள்ளனர்.
சிறார்கள் தங்களின் பைகளை பசை, கத்தரி பயன்படுத்தாமல் இயற்கை முறையில் தயாரிப்பதாகவும் விளக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிறு தாளில் கைஎழுத்தில் தங்கள் தொடர்பு எண்ணை எழுதிக் கொடுப்பதும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வீடியோவை தொழில் அதிபர் ஹர்ஷ் கோயங்கா உட்பட பலர் பகிர்ந்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். மூன்று மாணவர்களின் இந்த சுற்றுச்சூழல் நேச முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது.