ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் புதிய வசதி: இதய அடைப்பு 2 நிமிடத்தில் கண்டறியும் தொழில்நுட்பம்
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டத்தில், இதய அடைப்பை வெறும் 2 நிமிடத்தில் தெரிந்து கொள்ளும் புதிய பரிசோதனை முறைக்கு திறப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் தெரிவித்ததாவது:
மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை நான்கு வகை கட்டணங்களில் நடைபெறுகிறது. இதில் ‘பிளாட்டினம் பிளஸ்’ திட்டத்தின் கட்டணம் ரூ.4,000. இதுவரை இந்த திட்டத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது இதயத்தின் செயல்பாட்டை பரிசோதிக்கும் ‘டிரெட்மில்’ சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் அனைவரும் இந்த சோதனையைச் செய்ய முடியாது.
இதனை கருத்தில் கொண்டு, இப்போது ECG, ECHO பரிசோதனைகளுடன் சேர்த்து, ‘CT Calcium Scoring’ என்ற புதிய முறையில் இதய ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதா என்பதை வெறும் 2 நிமிடங்களில் கண்டறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரத்த நாளங்களில் எங்கு, எந்த அளவுக்கு கொழுப்பு தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இந்த முறையால் துல்லியமாக அறியலாம். தனியார் மருத்துவ மையங்களில் இந்த பரிசோதனைக்கு மட்டும் ரூ.4,000 வரை செலவாகிறது என்று அவர் கூறினார்.
இப்போது ‘பிளாட்டினம் பிளஸ்’ திட்டத்தில் ‘டிரெட்மில்’ சோதனைக்கு மாற்றாக இந்த பரிசோதனையைப் பெற முடியும். இதில் ஊசி, மருந்து எதுவும் தேவை இல்லை; மிக எளிதாக மிகவும் குறைந்த நேரத்தில் முடிவுகளைப் பெறலாம். ஆனாலும் இதய நிபுணர்களின் பரிந்துரையுடன் மட்டுமே இந்த பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்