தமிழக சட்டப்பேரவை மரபுகள் மற்றும் நடைமுறைகளை பேரவைத் தலைவர் மதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாமகவுக்கு எதிராக செயல்பட்டதற்காக சேலம் மேற்கு எம்எல்ஏ இரா. அருள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக மயிலம் எம்எல்ஏ சி. சிவக்குமார் கொறடாவாக தேர்வு செய்யப்பட்டு 108 நாட்கள் கடந்துவிட்டன.
அதேபோல், பேரவைக் குழுத் தலைவராக இருந்த ஜி.கே. மணி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனங்களுக்கான கடிதங்கள் பேரவைத் தலைவரிடம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தும், அவர் இதுவரை அங்கீகாரம் வழங்காமல் இருக்கிறார். நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டிய பேரவைத் தலைவர் அரசியல் நோக்கத்தில் மரபுகளை மீறுவது கண்டிக்கத்தக்கது,” என அன்புமணி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இனியாவது பேரவைத் தலைவர் நீதியையும் மரபுகளையும் மதித்து, பாமகவின் சட்டப்பேரவை குழுத் தலைவராக எஸ்.பி. வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக சதாசிவம், கொறடாவாக சி. சிவக்குமார் ஆகியோரை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.