தவெக கூட்டத்தில் 41 பேர் பலி: வேலுசாமிபுரம் வர்த்தகர்களை சிபிஐ விசாரணை
கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பகுதியாக, அப்பகுதி வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
செப்டம்பர் 27ஆம் தேதி தவெக கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. அக்டோபர் 30 முதல் நேற்று முன்தினம் வரை சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடமான வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்தனர். அப்போது 3D லேசர் ஸ்கேனர் உபகரணங்களை பயன்படுத்தி சாலை மற்றும் சுற்றுப்புற அமைப்பை அளவீடு செய்தனர். மேலும் அங்கு இருந்த கண்காணிப்போர் மற்றும் நேரடி சாட்சிகளிடமும் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையில், அப்பகுதி வர்த்தகர்கள், காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, கரூர் சுற்றுலா மாளிகையில் செல்போன் கடை நடத்துபவர், தையல் தொழிலாளர், மெக்கானிக் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் நேற்று ஆஜராகி, சிபிஐக்கு வாக்குமூலம் வழங்கினர்.
அதன்பின், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் வீடுகளுக்கும் அதிகாரிகள் சென்று நேரடி விசாரணை நடத்தினர்.
இதே நேரத்தில், கரூர் காமராஜபுரம் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் மூவர் ராம்குமார் என்ற நபர் குறித்து விசாரித்தனர். அவர் ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ அமைப்பில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. ராம்குமாரின் வீட்டுக்குச் சென்றபோது அது பூட்டியிருந்ததால், அந்த வீடு புகைப்படம் எடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.