அதிக எடையுடைய CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில்: இஸ்ரோவின் புதிய சாதனை
இந்திய கடற்படைக்காக உருவாக்கப்பட்ட CMS-03 செயற்கைக்கோளை, இஸ்ரோவின் சக்திவாய்ந்த LVM-3 ராக்கெட் மூலம் திட்டமிட்ட புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அதிக எடைகொண்ட செயற்கைக்கோளை ஏவிய புதிய சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.
முன்னதாக அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக வெளிநாட்டு உதவியை நாட வேண்டியிருந்த இஸ்ரோ, தனது ராக்கெட்டுகளின் உந்துவிசை திறனை மேம்படுத்தும் பணியில் கவனம் செலுத்தியது. இதன் விளைவாக LVM-3 ராக்கெட்டின் என்ஜின்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டன. இதன் மூலம் 4,410 கிலோ எடையுள்ள CMS-03 செயற்கைக்கோளை இந்திய ராக்கெட்டிலேயே செலுத்தும் திறனை இஸ்ரோ பெற்றது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று மாலை 5.26 மணிக்கு LVM-3 ஏவப்பட்டது. 16 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் 169 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட பாதையில் நிறுவப்பட்டது.
விரைவில் இதன் சுற்றுப்பாதை மாற்றப்பட்டு 170 கி.மீ முதல் 29,970 கி.மீ உயரம் வரை உள்ள புவி வட்டப் பாதையில் செயல்படும். 15 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள், இந்தியா மற்றும் கடலோரப் பகுதிகளை மேம்பட்ட முறையில் கண்காணிக்க உதவும். போர்காலங்களில் நேரடி தகவல் பரிமாற்றத்தையும் இது எளிதாக்கும். கடல் வழி ஊடுருவல்களைக் கண்டறியும் திறனும் அதிகரிக்கும்.
இதே போன்று மேலும் ஒரு கடற்படைக் செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும். இந்த வெற்றி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் உள்ளிட்ட எதிர்கால சவால்களுக்கு உந்துதலாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.