அனைத்துக் கட்சி கூட்டம் என்பது மக்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனை செய்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“மக்களின் நலனைப் பற்றிய பிரச்சினைகளில் ஒருபோதும் அனைத்து கட்சிகளையும் அழைக்காத முதல்வர் ஸ்டாலின், இப்போது மட்டும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து கூட்டம் நடத்துவது, இது உண்மைக்குப் புறம்பான திசைதிருப்பும் நாடகமே என்பதற்குச் சான்று. வாக்காளர் பட்டியல் திருத்தம் பல ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் வழக்கமான செயல்பாடு. அதனை திடீரென பெரிய விஷயமாக காட்டி, மழை வெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை மாற்ற முயற்சிப்பது இனி பயனின்றி போய்விட்டது.”
அவர் தொடர்ந்து கூறியுள்ளார்:
“திமுகவின் இத்தகைய நாடகங்களை மக்கள் இனி ஏற்க மாட்டார்கள். ஏற்கனவே பல கட்சிகள் இந்த கூட்டத்தைத் தவிர்த்துள்ளன. தோல்வி அச்சத்தால் திமுக கூட்டணிக் கட்சிகளே இதில் பங்கேற்றுள்ளன. திமுக அரசு மீண்டும் திசைதிருப்பும் அரசியலை நடத்துகிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். ஜனநாயகத்திற்கான உண்மையான அக்கறை இருந்தால், வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முன்னிட்டு நாடகம் நடத்துவதற்குப் பதிலாக, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முனைவீர்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.