மதுரையின் சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண கட்சி தொடங்கிய சங்கரபாண்டியன்!
2021 சட்டசபைத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 160 வாக்குகளும், 2024 மக்களவைத் தேர்தலில் மதுரைத் தொகுதியில் 1,060 வாக்குகளும், அதற்கு முன்பு மதுரை மாநகராட்சித் தேர்தலில் 235 வாக்குகளும் பெற்றவர் சங்கரபாண்டியன்.
இப்போது புதிய கட்சியை பதிவு செய்து சமூக வலைதளங்களின் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார். கட்சியில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
சங்கரபாண்டியன் கூறியதாவது:
“அரசியல் சாக்கடை என்று சொல்லி மக்கள் விலகுகிறார்கள். ஆனால் மதுரையில் சாக்கடை பிரச்சினை ஆண்டாண்டுக்காலமாக தீராத துன்பமாக உள்ளது. எந்தக் கட்சியும் இதை சரி செய்யவில்லை. இந்த பிரச்சினையைப் பற்றி மக்கள் கவனம் செலுத்த வைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தான் இந்தக் கட்சியை ஆரம்பித்தேன். சாக்கடை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.”