மகளிர் உலகக்கோப்பை | ‘இந்திய ரசிகர்கள் அமைதியாகுவார்கள்… வெற்றிக்கு நாங்கள் தயாராக உள்ளோம்’ — தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்
மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய ரசிகர்களை அமைதியாக்கும் வகையில் தங்கள் அணி வெற்றி பெறும் என்றும் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2023 ஆண்கள் உலகக்கோப்பை இறுதிக்கு முந்தைய தினம் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், “இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்” என கூறி பின்னர் ஆஸ்திரேலியா கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை இறுதியில் இந்தியா — தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்கான செய்தியாளர் சந்திப்பில் லாரா வோல்வார்ட் கலந்து கொண்டார்.
செய்தியாளர் ஒருவர், “பார்வையாளர்களின் ஆரவாரத்தை எப்படி சமாளிப்பீர்கள்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்தபடி லாரா,
“அதில் நாங்களே வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். ஸ்டேடியம் முழுவதும் இந்திய ரசிகர்களால் நிரம்பியிருக்கும். அது இந்திய அணிக்கு கூடுதல் அழுத்தமாகவே இருக்கும். காரணம், அவர்கள் வெற்றியை எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதுவே எங்களுக்கு சாதகமாக மாறலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், “உலகக் கோப்பையை வெல்வது எங்களுக்கு மிகப்பெரும் சாதனை. அது தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் கிரிக்கெட்டிற்கு பெரிய ஊக்கம் தரும்” எனவும் கூறினார்.
மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.