லாலுவின் ஹாலோவீன் கொண்டாட்டம் சர்ச்சை: பாஜக கடும் எதிர்ப்பு
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரக்குழந்தைகளுடன் ஹாலோவீன் விழாவைக் கொண்டாடிய புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவை “அர்த்தமற்றது” என்று லாலு விமர்சித்ததை நினைவுகூர்த்த பாஜக, இப்போது அவரே ‘பிரிட்டிஷ் திருவிழா’ கொண்டாடுவது முரண்பாடான செயல் என்று குற்றம் சாட்டியுள்ளது. பிஹார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த விவகாரம் அரசியல் சூடு பிடித்துள்ளது.
லாலுவின் மகள் ரோஹினி ஆச்சார்யா, குழந்தைகள் ஹாலோவீன் வேடத்தில் இருக்கும் புகைப்படத்துடன் லாலுவும் இருக்கும் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ஹாலோவீன் வாழ்த்துத் தெரிவித்தார்.
இதை பகிர்ந்த பாஜக விவசாய அணி,
“பிரிட்டிஷ் திருவிழாவை கொண்டாட லாலுவுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆன்மீக நம்பிக்கையுள்ள கும்பமேளாவை கிண்டல் செய்யும் இவர் மீது பிஹாரி மக்கள் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்,”
என விமர்சித்துள்ளது.
லாலுவின் முன் கருத்து
கும்பமேளா நடைபெற்றபோது, “கும்பமேளாவுக்கு என்ன அர்த்தம்? பயனற்றது” என்று லாலு கூறியிருந்ததை பாஜக மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.
ஹாலோவீன் — என்ன திருவிழா?
அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மா அலைச்சலடையும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட மேற்கு நாட்டு பழம்பெரும் தோற்றம் ஹாலோவீன். பேய், பிசாசு வேடமிட்டு மக்களை அச்சபடுத்தியும், அதே நேரம் சிரிப்பூட்டியும் கொண்டாடப்படும் விழா இது. அக்டோபர் 31-ஆம் தேதி ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழகத்தின் சில பகுதிகளில் காணப்படும் “மயான வேடம், விஞ்சி காளி” போன்ற சடங்குகளோடு ஒப்பிடப்படக்கூடியது என்றாலும் இன்று இது பெரும்பாலும் ஒரு பொழுதுபோக்கு தினமாக மாறியுள்ளது.