லண்டன் ரயிலில் கத்திக்குத்து கலவரம்: 10 பேர் காயம், 2 பேர் போலீஸ் வலையில்
சனிக்கிழமை மாலை லண்டன் நோக்கி சென்ற ரயிலில் ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இதில் 9 பேரின் நிலை மிக மோசமாக உள்ளது. சம்பவத்துக்கு தொடர்புடையதாக இரு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
டான்காஸ்டர் நகரில் இருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நோக்கி சென்ற ரயில், பீட்டர்பரோ நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, உள்ளூர் நேரப்படி இரவு 7:30 மணியளவில் தாக்குதல் நடந்தது. இதில் பயணிகள் பீதியடைந்தனர்.
ரயில் உடனடியாக ஹண்டிங்டன் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு படையினர் அவசரமாக ரயிலையில் புகுந்தனர். சாட்சியாளர் ஒருவர், “பெரிய கத்தி பிடித்து ஒருவர் திடீரென பயணிகள்மீது தாக்கினார்; இடமெங்கும் ரத்தம் இருந்தது” என கூறினார். பயணிகள் பலர் கழிப்பறைகளில் ஒளிந்தார்; சிலர் ஓட முயன்றபோது மிதிபட்டு காயமடைந்தனர்.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து பயங்கரவாத பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டன் போக்குவரத்து காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் கிறிஸ் கேசி, “சம்பவத்தின் தன்மை பற்றி விரைவில் விளக்கம் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த தாக்குதலை கண்டித்து, “பகுதியில் உள்ளவர்கள் காவல் துறையின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.