உ.பி. கோயிலுக்கு ரூ.10 லட்சம் நிதி — சமாஜ்வாதி எம்.பி இக்ரா ஹசன் அறிவிப்பு
மேற்கு உத்தரப்பிரதேசம், ஷாம்லி மாவட்டம் கைரானா தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. இக்ரா ஹசன் செயல்பட்டு வருகிறார். அந்தத் தொகுதியில் உள்ள பிரபலமான பாபா சமந்தாஸ் கோயிலில் கியான் பிக்ஷு மஹாராஜின் 173-வது பிறந்தநாள் விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்ட முஸ்லிம் எம்.பி இக்ரா ஹசன், கோயிலின் மேம்பாட்டிற்காக தனது தொகுதி முன்னேற்ற நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.
விழாவில் அவர் பேசுகையில், “பொது சேவைக்குப் பதிலாக சாதி சார்ந்த அரசியலுக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நலத்திட்டங்களில் பாகுபாடு செய்யும் இந்த அரசு, பின்தங்கிய சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது” என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் நாடாளுமன்ற விதிகளின்படி எம்.பி நிதியை மத சார்ந்த பணிகளுக்குப் பயன்படுத்த முடியாது. எனவே, இக்ராவின் இந்த அறிவிப்பு விவாதத்திற்கு வழிவகுக்கும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
பாஜக தரப்பினர் இதை எதிர்த்து பேசினால், அதனை எதிர்க்கட்சிக்கும் அரசியல் ஆதாயமாக மாற்ற முயலும் திட்டம் எனவும் கூறப்படுகிறது.
இக்ரா ஹசனின் சகோதரர் நஹீத் ஹசன் முன்பு மூன்று முறை கைரானா தொகுதியின் எம்.பி ஆக இருந்தார். அவர் சிறையில் இருந்த நிலையில், முதல் முறையாக போட்டியிட்ட இக்ரா வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்தார்.