துனிசியாவில் சிக்கிய 48 இந்திய தொழிலாளர்கள் — சம்பளம் இன்றி துயரம்; மத்திய அரசு தலையிட வேண்டுகோள்
ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் வேலைசெய்யச் சென்ற இந்திய தொழிலாளர்கள் 48 பேருக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காததால், அவர்கள் உணவுக்குக் கூட வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
டெல்லி அருகே குருகிராமில் செயல்படும் பிரேம் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் 48 பேரை வேலை வாய்ப்புக்காக துனிசியாவுக்கு அழைத்துச் சென்றது. ஆனால், அவர்களுக்கு எந்தவித ஒப்பந்த ஆவணங்களும் வழங்கப்படவில்லை. 8 மணி நேர வேலை என்று கூறி அழைத்திருந்தாலும், அங்கு 12 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பளத்தை கேட்டதற்காக “நாடு திரும்ப முடியாது, சிறைக்கு செல்ல நேரிடும்” என அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர். தற்போது அவர்கள் பணம் இன்றி உணவுக்குத் துடித்து வருவதாகவும், உடனடி உதவி தேவைப்படுவதாகவும் வீடியோவுகள் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஜார்க்கண்ட் எம்எல்ஏ நாகேந்திர மகதோ, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கடிதம் எழுதி தலையிடக் கோரியுள்ளார்.