இன்று விண்ணில் பாயவுள்ள CMS-03: 25 மணி நேர கவுன்ட்அவுன் தொடங்கியது
இந்தியாவின் புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான CMS-03 (GSAT-7R) இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்அவுன் நேற்று பிற்பகல் 3.56 மணிக்கு ஆரம்பமானது.
2013-ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட GSAT-7 செயற்கைக்கோளின் செயல்நேரம் முடிவடைவதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலாக CMS-03 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ தயாரித்து அனுப்புகிறது.
4,410 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், இஸ்ரோ வின் எல்விஎம்-3-எம்5 ராக்கெட் மூலம் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் மையம் இரண்டாம் ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 5.26 மணிக்கு பாயும்.
₹1,600 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இச்செயற்கைக்கோள்,
- இந்திய கடற்படை
- கடல்சார் பாதுகாப்பு
- ராணுவத் துறை
போன்ற பாதுகாப்புத் துறைகளின் தகவல் தொடர்பு மேம்பாட்டிற்கு உதவும்.
இந்த செயற்கைக்கோள் குறைந்தது 170கி.மீ உயரத்திலிருந்து, அதிகபட்சம் 29,970கி.மீ உயரம் வரை புவிவட்டப் பாதையில் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இது இதுவரை இந்தியா புவிவட்டப் பாதைக்கு அனுப்பும் மிக அதிக எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் என்பதும் முக்கியம்.