பொதுநல வழக்கு எல்லாவற்றுக்கும் தீர்வு அல்ல: சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
எந்த தவறு நடந்தாலும் அதற்கான தீர்வாக பொதுநல வழக்கை பார்க்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
காவல்துறையினர் நீதிமன்றத்தில் தவறான தகவல் வழங்குவதை தடுக்க விதிகள் அமைக்க வேண்டும் என டெல்லி பிரதேசத்தைச் சேர்ந்த ஆதித்யா எனும் நபர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவின்படி, தனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் முன்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரிக்கப்பட்டபோது, காவல்துறை “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டோம்” என்று தெரிவித்ததால், அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பின்னர் குற்றப்பத்திரிகை நகல் கேட்டபோது, அது தாக்கல் செய்யப்படவில்லை என்பது தெரிய வந்ததாக அவர் கூறியிருந்தார். இதனால், அரசு வழக்கறிஞர் மற்றும் காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரினார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர், இது தனிப்பட்ட பிரச்சினை எனவும், உண்மையில் தவறான தகவல் வழங்கப்பட்டிருந்தால் அதற்கான சட்ட நடைமுறைகளை மனுதாரர் தனியாக மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
பொதுநல வழக்கு, நீதிமன்றம் செல்வதற்கான வாய்ப்பில்லாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவி என்பதை நீதிமன்றம் நினைவூட்டியது. அதன் மூலம் தனிப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்க முயல்வதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெளிவாக கூறினர்.
மேலும், நீதிமன்றத்திற்கு தவறான தகவல் வழங்குவதை தடுக்க ஏற்கெனவே சட்டங்கள் உள்ளன; புதிய விதிகள் உருவாக்குவது அரசின் வேலை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.