உதவிப் பேராசிரியர் நியமன நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் – பெ. சண்முகம் வலியுறுத்தல்
தமிழக அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நிபந்தனைகளை தளர்த்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக இக்கல்லூரிகள் கவுரவ விரிவுரையாளர்களின் மூலம் செயல்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு நம்பிக்கையளிக்கக் கூடியதாக உள்ளது.
ஆனால், புதிய அறிவிப்பில் சேர்க்கப்பட்டுள்ள சில விதிமுறைகள் விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையற்ற சிக்கல்களை உருவாக்குகின்றன. உதாரணமாக, விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிப்படி, உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய தகுதித் தேர்ச்சி (NET) அல்லது முனைவர் பட்டம் (Ph.D) பெற்றிருப்பது போதுமானது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் புதிதாக எழுத்துத் தேர்வை சேர்ப்பது தேவையற்றது. விண்ணப்பத்தின் அடிப்படையில் தரவரிசை தயாரித்து, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு நேர்முகத் தேர்வு நடத்துவது சிறந்த நடைமுறையாக இருக்கும்.
மேலும், விண்ணப்பிக்கும்போது கட்டாயமாக கேட்கப்படும் நடத்தைச் சான்றிதழ் மற்றும் நற்பண்பு சான்றிதழ் ஆகியவை நடைமுறையில் பெறுவதற்கு கடினமானவை. எனவே, விண்ணப்பிக்கும்போது அனுபவச் சான்றிதழ் மட்டும் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும்.
அதேபோல், தமிழ் வழி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு விதியிலும் தளர்வு தேவை. தற்போது முதுகலைப் படிப்புவரை தமிழை பயிற்று மொழியாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது; இதிலும் பாடநெறி அடிப்படையிலான தளர்வுகள் வழங்கப்பட வேண்டும்,” என பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.