“கட்சியிலிருந்து நீக்கம் – நீதிமன்றத்தில் சவால்: செங்கோட்டையன்”
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
“என்னை கட்சியில் இருந்து நீக்கியது மிகுந்த வருத்தம் தருகிறது. மனம் நொந்து கண்ணீர் வருமளவு வேதனை அடைகிறேன். இவ்வாறு என்மீது எடுக்கப்பட்ட முடிவை நீதிமன்றத்தில் எதிர்க்கப் போகிறேன். இபிஎஸ் தற்காலிக பொதுச் செயலாளர் மட்டுமே. அதிமுக ஒன்று சேர்ந்து செயல்பட்டால் தான் தேர்தலில் வெற்றி பெறும்,” என்று அவர் கூறினார். மேலும், “துரோகத்துக்கு நோபல் பரிசு இருந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் தக்கது” என கடுமையாக விமர்சித்தார்.
நேற்று பழனிசாமி உத்தரவின் பேரில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், தற்போதைய தேர்தல் காலத்தில் இந்த நடவடிக்கை அரசியல் சூட்டினை அதிகரித்துள்ளது.
இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“1972 முதல் அதிமுகவில் பணியாற்றி வருகிறேன். எம்ஜிஆருடன் என் பயணத்தை தொடங்கினேன். 1975ல் நடந்த கோவை பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தி அவரது பாராட்டைப் பெற்றேன். அதன் பின்னர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலிலும், அவர்களது நம்பிக்கையிலும் கட்சிக்காக உழைத்தேன். நான் எந்த நிலையிலும் அதிமுகக்கு விசுவாசமாக இருந்தேன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபடக்கூடாது என்பதற்காக இரண்டு முறையிலும் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தேன். எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆனது எப்படி என்பதை மக்கள் அறிவார்கள். ஆனால் அவர் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்பு தொடர்ந்து கட்சிக்கு தேர்தல் தோல்விகள் ஏற்பட்டன. எம்ஜிஆர் தோல்வி அறியாத தலைவர், ஜெயலலிதா ஒரு முறையே தோற்றாலும் அடுத்த முறை வெற்றி பெற்றார்.
கட்சியில் உள்ள விரக்தியை மனதில் கொண்டு நாங்கள் ஆறு பேரும் இபிஎஸிடம் கட்சியை ஒன்றிணைக்க வேண்டியது அவசியம் என கூறினோம். தொண்டர்களின் உணர்வும் அதுவே. அதற்காகத்தான் நான் டிடிவி தினகரன், ஓபிஎஸை சந்தித்தேன். ஆனால் அதன் பயனாக என்னை நீக்கி தண்டித்துள்ளனர்.
நான் கட்சியில் நீண்ட காலம் பணியாற்றிய மூத்தவர். குறைந்தது நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். தற்போது என்னை நீக்கியதால் மிகுந்த துயரத்தில் உள்ளேன். நீக்கத்துக்கு எதிராக சட்டபூர்வமாக போராடுவேன். இபிஎஸ் ‘பி’ டீம் என்று என்னை குற்றம் சொல்லுகிறார். யார் உண்மையில் ‘பி’ டீம் என்பதை மக்கள் அறிவார்கள்.
கொடநாடு வழக்கில் அவரது பெயர் ஏ1 என்பதை மறந்து பேசுகிறார். அதிமுக வெற்றி பெற வேண்டுமெனில் மீண்டும் ஒன்றுபட வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.