“ஒப்பிடுவதை நிறுத்துங்கள்” – சிம்பு வேண்டுகோள்
நடிகர்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுவதை நிறுத்துமாறு நடிகர் சிம்பு தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி ‘டியூட்’, ‘பைசன்: காளமாடன்’ மற்றும் ‘டீசல்’ என மூன்று தமிழ் படங்கள் வெளியான நிலையில், அந்த படங்களுக்கான தனது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் சிம்பு. அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் சிம்பு தெரிவித்துள்ளார்:
“அன்பார்ந்த ரசிகர்களே, இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கானது. ‘டீசல்’, ‘டியூட்’ மற்றும் ‘பைசன்’ ஆகிய படங்கள் அன்பு, நம்பிக்கை, கடின உழைப்பின் பலனாக வெளிவந்துள்ளன. அவற்றை ஒப்பிடுவதை நிறுத்தி, தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக அவர்களை கொண்டாடுவோம்.
சினிமா துறையில் உள்ளவர்களை, புதிதாக வருபவர்களை, இன்னும் வாய்ப்பு எதிர்பார்க்கும் திறமைகளை ஆதரித்து ஒன்றாக இந்தத் துறையை உயிருடன் வைத்திருக்க வேண்டும்,” என்று கூறினார்.
இதனுடன், சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் ப்ரோமோவும் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் தாணு தயாரிப்பில் உருவாகிறது. படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது.