அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பறித்த போலி மருத்துவர் கைது
யோகா பயிற்சியாளர் மற்றும் அரசு வேலை கிடைக்கச் செய்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை வில்லிவாக்கம் சி.டி.எச். சாலையைச் சேர்ந்த ரத்தினகுமாரி (48) சைபர் க்ரைம் பிரிவில் கடந்த 17ஆம் தேதி புகார் செய்திருந்தார்.
அவரது புகார்:
“யோகாவில் Ph.D முடித்துள்ள நான், யோகா கற்க விரும்புவோருக்கு பயிற்சி அளித்து வருகிறேன். 2024 டிசம்பரில், Facebook-ல் டாக்டர் சுரேந்தர் என்ற நபர், ஒரு வருட உணவியல் சான்றிதழ் படிப்புக்கான விளம்பரம் வெளியிட்டிருந்தார். அவரை தொடர்பு கொண்டபோது, அவர் தன்னை விருதுநகர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் உணவியல் நிபுணர் Dr. சுரேந்தர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
மேலும், சென்னை நேரு ஸ்டேடியத்தில் அதிக சம்பளத்துடன் 3 வருட ஒப்பந்த அடிப்படையில் யோகா பயிற்றுநர் வேலை கிடைக்கச் செய்வதாக கூறி எனிடம் ரூ.3.51 லட்சம் பெற்றார். ஆனால் வேலை கிடைக்கவில்லை; பணமும் திருப்பி தரப்படவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில், போலீஸார் சுரேந்தர் (30) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் உண்மையில் மருத்துவர் அல்ல என்பது தெரியவந்தது. அவர் ஐதராபாத் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் Ph.D ஆன்லைன் படித்து வருபவர் எனவும் உறுதி செய்யப்பட்டது.
மேலும், அவர் சென்னை மருத்துவமனையில் Nutritionist ஆக பணியாற்றியதை பயன்படுத்தி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி 2018இல் ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.5 லட்சம், வீட்டு உரிமையாளரிடம் ரூ.3 லட்சம், மற்றொரு நபரிடம் ரூ.13.76 லட்சம் மோசடி செய்ததும் கண்டறியப்பட்டது.
கொரோனா காலத்தில் தன்னார்வலராக அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கி, அதன்பின் தனது பெயருக்கு முன் ‘டாக்டர்’ பட்டம் சேர்த்து பலரை ஏமாற்றி, பெற்ற பணத்தில் ஆடம்பர வாழ்க்கை நடத்தியுள்ளார் என்று போலீஸ் தெரிவித்தது.