உத்தர பிரதேசத்தில் ஓநாய் வேட்டைக்கு தீவிரம் – முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால் கிராம மக்கள் நிம்மதி
உத்தர பிரதேச மாநிலம் பஹரைச் மாவட்ட கேசர்கஞ்ச் பகுதியில் கடந்த செப்டம்பர் 9 முதல் ஓநாய்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இமயமலை அடிவார நதிக்கரை கிராமங்களில் நடந்த தாக்குதல்களில் 4 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 11 குழந்தைகள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், செப்டம்பர் 27 அன்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் அளித்தார். பின்னர் வனத்துறை அதிகாரிகளுடன் வான்வழி ஆய்வு மேற்கொண்டு, ஓநாய்களை பிடிக்க முடியாவிட்டால் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து, தமிழர் செம்மாறன் தலைமையில் 32 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, பஹரைச் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வேட்டைப் பணியில் ஈடுபட்டுள்ளன.
வனத்துறை உயரதிகாரி செம்மாறன் தெரிவித்ததாவது:
“ஓநாய்கள் பெரும்பாலும் குழந்தைகளைக் குறிவைத்து தாக்குகின்றன. பாதிக்கப்பட்ட 50 கிராமங்களில் உள்ள 40,000 மக்களுக்குள் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியுள்ளோம். டிரோன் கண்காணிப்பு, துப்பாக்கிச் சூடு, வலைப் பிடிப்பு, மருத்துவ உதவி உள்ளிட்ட ஐந்து வகை குழுக்கள் செயல்படுகின்றன. இதுவரை 4 ஓநாய்கள் பிடிக்கும் போதே இறந்துள்ளன; மேலும் 2 ஓநாய்களைத் தேடிவருகிறோம்,” என்றார்.
ஒரு மாதமாக பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டிருந்த பள்ளிகளை தீபாவளிக்குப் பிறகு திறக்க அரசு முடிவு செய்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன; ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.
இதுவரை ஓநாய் தாக்குதலில் காயமடைந்த 15 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ₹50,000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் பஹரைச் பகுதியில் இதேபோன்ற ஓநாய் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போதைய நடவடிக்கைகளால் தாக்குதல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.