திமுக போலி வாக்காளர்களை உருவாக்கி வருகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தில் போலி வாக்காளர்களை நீண்ட காலமாக திமுக உருவாக்கி வருகிறது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“அமைச்சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் குற்றச்சாட்டில், அமலாக்கத்துறை டிஜிபி-க்கு கடிதம் அனுப்பியுள்ளது. அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், மற்றும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இணைந்து ஊழலில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை,” என்றார்.
பிஹார் தொழிலாளர்கள் விவகாரத்தில்,
“தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களின் அணுகுமுறையையே பிரதமர் விமர்சித்துள்ளார். ஆனால் பிரதமர் கூறாத விஷயத்தை கூறியதாக முதல்வர் ஸ்டாலின் திரித்து பேசுகிறார்,” என்றும் அவர் கூறினார்.
நவம்பர் 3-ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கவுள்ளதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை,
“போலி வாக்காளர்களை உருவாக்குவது திமுகவின் பழக்கம். எனவே இந்திய தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் அதிகாரிகளை நேரடியாகக் கட்டுப்படுத்தி கண்காணிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
மேலும்,
“பதவி என்பது வெங்காயம் போல; இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் என் கடமையைச் செய்கிறேன். பிரதமர் மீது என் நம்பிக்கை குறையவில்லை. மாற்றத்திற்காக நான் போராடுகிறேன். அமெரிக்க வரி கொள்கையால் கோவை, திருப்பூர் பகுதிகளில் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது; இதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தீர்க்க செயல்பட்டுள்ளார்,” என்றும் அவர் தெரிவித்தார்.