“ரோஹித், விராட் உடனான பிணைப்பு எப்போதும் போல வலுவாக உள்ளது” – ஷுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஒருநாள் கேப்டன் ஷுப்மன் கில், மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியுடன் தன்னுடைய உறவு முன்பைப் போலவே வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
சமீபத்தில் ரோஹித் சர்மா ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இது பெரும் விவாதமாக மாறியது. அந்த நிலையில் ஷுப்மன் கில் ஊடகங்களிடம் பேசியபோது கூறியதாவது:
“வெளியில் பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். ஆனால் ரோஹித் உடனான எனது உறவு எப்போதும் போலவே உள்ளது. நான் அவரிடம் எப்போது வேண்டுமானாலும் ஆலோசனை பெறுவேன், அவர் அதை மனதார வழங்குவார்.
‘நீங்கள் கேப்டன் என்றால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்வியை நான் அடிக்கடி ரோஹித், விராட் இருவரிடமும் கேட்பேன். அவர்கள் திறந்த மனதுடன் பதிலளிப்பார்கள். அணியின் முன்னேற்றத்துக்கான விவாதங்களிலும் அவர்களுடன் சேர்ந்து பேசுவது வழக்கம். அவர்களுடன் எனது பிணைப்பு எப்போதும் வலுவாகவே உள்ளது,” எனக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தார்:
“இந்த பொறுப்பு எனக்கு மிகப் பெரிய ஒன்று. இதற்கு முன்பு இந்த பதவியை தோனி, விராட், ரோஹித் போன்றோர் வகித்துள்ளனர். அவர்களது அனுபவம் அணிக்கே அல்லாமல் எனக்கும் பெரும் வழிகாட்டுதலாக உள்ளது.
கேப்டன் என்றாலும், பேட்டிங் செய்யும் போது என் முழு கவனமும் ஆட்டத்தில்தான் இருக்கும்; அப்போது நான் கேப்டனாக சிந்திப்பதில்லை. அழுத்தம் நிறைந்த தருணங்களில் நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்பதில் நம்பிக்கை உள்ளது,” என ஷுப்மன் கில் தெரிவித்தார்.