வன்னியர் சங்க நிர்வாகி கண்ணன் கொலை வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றத்தின் முழு தீர்ப்பு
மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி கண்ணன் கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும் தலா ₹2,000 அபராதமும் விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதே வழக்கில் 12 பேர் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.
வழக்கின் பின்னணி
கொத்தத்தெருவை சேர்ந்த கண்ணன் (27) வன்னியர் சங்க நகரச் செயலாளராக இருந்தார்; மேலும் அவர்மீது சில குற்ற வழக்குகள் இருந்தன.
2021 நவம்பரில் உணவகத்தில் ஏற்பட்ட மோதலில், மின்வாரிய ஊழியர் கதிரவனை தாக்கியதாக புகார் வந்ததையடுத்து கண்ணன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
2022 ஆகஸ்டில் விடுதலையான கண்ணன், ஆகஸ்ட் 17 அன்று இரவு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே வந்த கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதன்காண போலீசார் 22 பேரை கைது செய்தனர்.
பின்னர், அதே வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் மார்ச் 2024-ல் மர்மமாக கொலை செய்யப்பட்டதால், கண்ணனின் சகோதரர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற தீர்ப்பு
நீதிபதி சத்தியமூர்த்தி தீர்ப்பளிப்பின் போது,
ஆயுள் தண்டனை பெற்றவர்கள்:
- கதிரவன் (41)
- மகாதேவன் (30)
- சேது (26)
- சந்தோஷ் (21)
- திவாகர் (26)
- கார்த்திக் (30)
- சுபாஷ் சந்திரபோஸ் (29)
- ஹரிஷ் (25)
- பிரித்திவிராஜ் (31)
12 பேருக்கு சாட்சியமின்மையால் விடுதலை வழங்கப்பட்டது.
மொத்தம் 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், ஒரு கிராம நிர்வாக அலுவலர் பொய்யான சாட்சி அளித்ததாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட இருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆம்புலன்ஸிலேயே விடுதலை அறிவிப்பு
குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரன் உடல்நலக்குறைவால் ஆம்புலன்ஸில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். நீதிபதி அவரிடம் நேரடியாக சென்று, “உங்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை; விடுதலை” என்று அறிவித்தார்.
‘ஜெய்பீம்’ விவாதம் – முக்கிய காரணம்?
இந்த வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினருக்கும் ‘ஜெய்பீம்’ திரைப்படம் குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் எதிர்மறை மனநிலையை தூண்டியதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.