எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில்
இந்தியாவின் நவீன ராணுவ-கடற்படை தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் சிஎம்எஸ்-03 (ஜிசாட்-7ஆர்) செயற்கைக்கோள், நாளை (நவம்பர் 2) மாலை 5.26 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.
ஜிசாட்–7 செயற்கைக்கோளின் ஆயுள் முடிவடைவதால், அதற்குப் பதிலாக ரூ.1,600 கோடி செலவில் இஸ்ரோ வடிவமைத்துள்ள உயர்தர சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. 4,410 கிலோ எடையுடைய இந்த செயற்கைக்கோள், 170 கி.மீ முதல் 29,970 கி.மீ வரை கொண்ட புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது இஸ்ரோ இதுவரை ஏவிய மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும்.
இந்த செயற்கைக்கோள் கடற்படை, ராணுவங்களுக்கு பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை வழங்கும். இந்தியக் கடல் எல்லைகள் கண்காணிப்பு, போர்க்கப்பல்–விமானங்களுக்கிடையேயான தொடர்பு ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.
இது எல்விஎம்-3 ராக்கெட்டின் ஏழாவது பயணம். இதே ராக்கெட்டின் மூலம் சந்திரயான்–3 விண்கலமும் வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தது. ஏவுதலுக்கான 24 மணி நேர கவுண்ட்டௌன் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இறுதிக்கட்ட ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.