மாவட்ட தலைநகரங்களில் ஆதார் சேவை மையங்கள் அமைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய ஒவ்வொரு மாவட்டத் தலைமையகத்திலும் ஆதார் சேவை மையம் அமைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பி. புஷ்பம் தாக்கல் செய்த மனுவில், “74 வயது பெண் நான். என் கணவர் இந்திய ராணுவத்தில் 21 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; 23.5.2025 அன்று இறந்தார். குடும்ப ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தபோது, என் ஆதார் அட்டையில் பெயர் மற்றும் பிறந்த தேதியில் தவறுகள் உள்ளதாகக் கூறி மனு நிராகரிக்கப்பட்டது. பல இடங்களில் சென்றும் திருத்தம் செய்ய இயலவில்லை. ஆதார் அட்டையில் உள்ள தவறுகளைச் சரி செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “ஆதார் விவரம் தவறாக இருப்பதால் ஓய்வூதியத்திற்கான உரிமை மறுக்கப்படுவது சரியல்ல. ஆதார் சட்டத்தின் 31-வது பிரிவின்படி திருத்தம் செய்யலாம். தற்போது மதுரையில் மட்டுமே பெயர், பிறந்த தேதி, பயோமெட்ரிக் மாற்றம் செய்ய முடிவதால் அதிக மக்கள் வரிசையாக காத்திருக்கின்றனர். இது தமிழக பிரச்சினை மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் உள்ளது” எனக் கூறினார்.
தற்போது தமிழகத்தில் 4056 ஆதார் பதிவு மையங்கள் உள்ளன. 2026 மார்ச்சிற்குள் 28 ஆதார் சேவை மையங்கள் திறக்கப்படும் என UIDAI தெரிவித்துள்ளது. இருந்தாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சேவை மையம் அவசியம் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மனுதாரர் மதுரை ஆதார் சேவை மையத்தில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்; பின்னர் ஓய்வூதிய ஆவணங்களில் மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.