“மத்திய அரசு எதை அறிவித்தாலும் திமுக எதிர்க்கிறது” – ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து
மத்திய அரசு அறிமுகப்படுத்தும் எந்த திட்டத்தையும் திமுக எதிர்க்கும் பழக்கம் கொண்டுள்ளது என ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து கூறினார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“தமிழ்நாடு மக்கள் யாரை வந்தாலும் வரவேற்கும் மனப்பான்மை உடையவர்கள். தமிழ் மக்கள் யாரையும் துன்புறுத்துவதில்லை. கூட்டணி குறித்து பெரிய கட்சிகளே இன்னும் முடிவு செய்யாத நிலையில் இருக்கின்றன.
மக்களவைத் தேர்தலில் நாம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். அத்தொடர்பு தொடருமா என்று இதுவரை முடிவு செய்யவில்லை. இதையொட்டி நிறுவனர் பாரிவேந்தர் பொதுக்குழுவை கூட்டி தீர்மானிப்பார்.
15 வருட அரசியல் பயணத்தில் பல சிரமங்களை சமாளித்து தற்போது தான் கட்சி ஒரு நிலைத்தன்மையை அடைந்துள்ளது. அதேபோல், தவேக கட்சியை உருவாக்கியுள்ள விஜயும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் தானியங்களை சரியாக சேமிப்பது அரசின் பொறுப்பு; அதை விரைந்து செய்திருக்க வேண்டியது அவசியம். இலவசங்கள் தேவையில்லாத சூழலை உருவாக்குவது எங்கள் கட்சியின் நோக்கம்.
அரசியலில் பலர் பணம் சம்பாதிக்க வருகிறார்கள். ஆனால் எங்கள் கட்சி மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறது.
மத்திய அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவந்தாலும் திமுக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. வாக்காளர் பட்டியலின் தீவிர சிறப்பு திருத்த பணியில் எந்த குறையும் இல்லை” என அவர் தெரிவித்தார்.